எங்களை பற்றி
இனிய நண்பர்களே !
வேர்கள் அறக்கட்டளை நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு, நாமும் உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தை உடைய நண்பர்களால் உருவாக்க பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். வேண்டியவர்க்கு உணவு, கல்வி உதவி, ஆளுமை திறன் பயிற்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும் நாங்கள், இரத்த தானம், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பயிற்சிகள் ஆகியவையும் நலிந்தோர்க்கு சென்று சேர ஆவலுடன் பணியற்றி வருகிறோம்.
தற்போதைய செயல்பாடுகள்:
· ஆதரவற்றோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்களில் அடைக்கலமாய் இருப்பவர்களுக்கு, உணவு வழங்குவது, தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் தனித்து விடப்படவில்லை, அவர்களுக்கு நாங்களும் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது
· குழந்தை தொழிலாளர்களை கொத்தடிமையிலிருந்து மீட்பதும், அவர்கள் முறையான கல்வி, மற்றும் குழந்தைபருவத்தை திரும்ப பெற உதவுவது
· குழந்தை தொழிலாளர் முறையிலிருந்து மீண்டு பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு விடுபட்ட கல்வியாண்டுகளை பெற உதவும் 3 வேர்கள் கல்வி மையங்களை நடத்துவது,
· தேர்வுகளை சிறப்பாக எழுத , வளர் இளம் பருவத்து மன உளைச்சல்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ள ஆலோசனை, தன் திறன் வளர்த்தல், நினைவுத்திறனை மேம்படுத்த, வாழ்க்கை குறிக்கோள் அமைத்துக்கொள்ள பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு, ஆளுமை பயிற்சி முகாம்கள்,
· கற்கை குறைபாடுகள், மற்றும் உளவியல் பிரச்னைகளுக்கு மாணவர்களுக்கு உதவ வேர்கள் உளவியல் ஆலோசனை மையம்,
· விழிப்புணர்வு மற்றும் தன் திறனறியும் பயிற்சி முகாம்கள், கிராமப்புற பெண்களுக்கு,
· மருத்துவ முகாம்கள் மற்றும், இரத்ததான உதவி, தேவைப்படும் எல்லோர்க்கும்,
உங்கள் உதவியுடன் செய்ய விரும்புபவை:
தேவையானவர் கல்வி பயில தங்கி செல்லவும், உணவு நாடி வருவோர்க்கு எப்போதும் உதவும் வகையிலும், ஒரு வேர்கள் மையம்
குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி உதவி மையங்கள்
நீங்களும் பங்கேற்கலாம்:
வேர்கள் கல்வி உதவி மையங்களில் பகுதி நேரமாக பணியாற்ற
குழந்தை தொழிலாளர்களின் கல்வி உதவிக்கு பொருளாகவோ,
கல்வி செலவை எங்களோடு பகிர்ந்துகொண்டோ,
உங்களால் முடியும் எந்த விதத்திலும்,
உதவுங்கள், எங்களோடு இந்த சிறிய சமூக பணியோடு இணைந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
வேர்கள் அறக்கட்டளைக்காக
தலைமை அறங்காவலர்/ அறங்காவலர்
தொடர்புக்கு:
நளினி: 94442 65711
மோகன்: 9442374803
ஸ்ரீதர் : 9444034905
சீனிவாசன்; 9443602043
விஜய பாஸ்கரன்: 9884116614
முகவரி:
வேர்கள் அறக்கட்டளை,
42c,ஆலடி பிள்ளையார் கோவில் தெரு,
காஞ்சிபுரம் 631 501
தமிழ்நாடு,
இந்தியா
கல்வி உதவி பெறுவோரில் சிலரின் விவரங்கள்:
பெயர்: செல்வி. சுகன்யா, 12 வயது
குடும்பபிண்ணனி:
தறி வேலை. இரண்டு இளைய சகோதரிகள், உடல்நலம் குறைந்த அப்பா, குறைந்த வருமானம்
வேர்களின் உதவி:
மே மாதம், 2003 குடும்ப கடன் சுமை காரணமாக 3000/-ரூ -க்கு ஒரு முதலாளிக்கு வேலை செய்ய பணிக்கப்பட்டவரை, திரு மோகன், வேர்களின் தன்னார்வ தொண்டர் கண்டெடுக்க, இன்று ஐயன்பேட்டை பள்ளியில், முதன்மையான மாணவிகளுள் ஒருவர்.
தேவை: ரூ.1000/- கல்வி, சீருடை மற்றும் ஊட்டச்சத்து மாவிற்காக
பெயர்: செல்வன். பாபு, 10 வயது
குடும்பபிண்ணனி: 4 வயதிலேயே தறி வேலை. 3 குழந்தைகள், குறைந்த வருமானம், பள்ளிக்கு அனுப்பினால் குடும்ப வருமானம் குறைந்துவிடும் என்ற பயம்.
வேர்களின் உதவி: 2003. மாதச் சம்பளம்-ரூ150/-க்கு ஒரு முதலாளிக்கு வேலை செய்ய பணிக்கப்பட்டவரை, திரு மோகன், வேர்களின் தன்னார்வ தொண்டர் கண்டெடுக்க, பெற்றோர் அவரை பள்ளியில் சேர்க்க அனுமதிக்கவில்லை, அவர்களிடம் பேசி, கல்வி குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்விற்காக, என புரிய வைத்து பள்ளியில் சேர்த்தோம், இன்று அவர் csm பள்ளியில் பயில்கிறார்.
தேவை: ரூ.800/- கல்வி, சீருடை மற்றும் ஊட்டச்சத்து மாவிற்காக
பெயர்: செல்வி.சாந்தி, 14 வயது
குடும்பபிண்ணனி: 5வது படிக்கும்போது (முதல் ரேங்க் எடுப்பவர்), பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு 10 வயதிலேயே தறி வேலை. 8 வயதில் தம்பி, பள்ளிக்கே போகாதவன்,கடன் சுமை, குறைந்த வருமானம், பள்ளிக்கு அனுப்பினால் கல்வி செலவு பாரம் என்ற நிலை
வேர்களின் உதவி: 2003.ரூ3000/- கடனுக்கு ஒரு முதலாளிக்கு கொத்தடிமையாக வேலை செய்ய பணிக்கப்பட்டவரை, திருமதி குணா, வேர்களின் தன்னார்வ தொண்டர் கண்டெடுக்க, அவளை மீட்டு , பெற்றோருக்கு ஆறுதல் கூற அவர்கள் சந்தோஷத்துடன் பள்ளியில் சேர்ந்தார்கள், இன்று அவர் தியாகி நடுனிலை பள்ளியில் பயில்கிறார்.
தேவை: ரூ.1500/- கல்வி, சீருடை மற்றும் ஊட்டச்சத்து மாவிற்காக
பெயர்: செல்வி.கன்னியம்மாள், 15 வயது
குடும்பபிண்ணனி: 5வது படிக்கும்போது பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு 10 வயதிலேயே தறி வேலை. அக்கா, அண்ணன் எல்லாருமே பள்ளிக்கு செல்லாதவர்கள், சிறுவயது முதலே தறிக்கு செல்பவர்கள், அவ்வப்பொழுது காணாமல் போய்விடும் அப்பா, மெலிந்த அம்மா, இதய நோயுள்ள அண்ணன், கடன் சுமை, குறைந்த வருமானம், தன்னுடைய அக்கா அண்ணன் போலவே குடும்ப பாரத்தை தாங்க அடிமை முறையில் தறி வேலை.
வேர்களின் உதவி: 2003.ரூ4000/- கடனுக்கு ஒரு முதலாளிக்கு கொத்தடிமையாக வேலை செய்ய பணிக்கப்பட்டவரை, வேர்களின் தன்னார்வ தொண்டர் கண்டெடுக்க, அவளை மீட்டு , ஆறுதல் கூற அவர்கள் சந்தோஷத்துடன் பள்ளியில் சேர்ந்தார்கள், இன்று அவர் தியாகி நடுனிலை பள்ளியில் பயில்கிறார். பள்ளிக்கு செல்ல மிகுந்த விருப்பம் உடையவர், எப்போதும் பேச்சு, பள்ளிக்கு செல்லும் குதூகலம், மதிப்பெண் குறைவாக பெற்றாலும் (அது அவருடைய குறை இல்லையே!), 3 கிமீ நடந்தே பள்ளிக்கு செல்பவர், நாம் சைக்கிள் வாங்கி கொடுத்ததனால் இப்பொழுது சைக்கிளில் செல்கிறார்.
தேவை: ரூ.1500/- கல்வி, சீருடை மற்றும் ஊட்டச்சத்து மாவிற்காக
பெயர்:1. செல்வி.கல்பனா, 13 வயது, 2. செல்வி. கலா, 12 வயது, 3. செல்வன். ராஜா, 13 வயது
குடும்பபிண்ணனி: மூவருமே குழந்தை தொழிலாளர்கள். குடும்ப வறுமை காரணமாக கொத்தடிமை வாழ்வு வாழ்ந்தவர்கள். பெற்றோர்களுக்கு படிக்க வைக்க விருப்பம் இருந்தாலும் வறுமை காரணமாக அதை செய்ய முடியாமல் இருந்தவர்கள்.
வேர்களின் உதவி: 2005 இந்த வருடம் இவர்களை மீட்டு (ரூ.3000/- ஒவ்வொருவர் மீதும் இருந்த கடன் சுமை) தியாகி நடுனிலை பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்திருக்கிறோம். இந்த காலாண்டு தேர்வில் ரேங்க் எடுத்திருக்கிறார்கள். வேர்கள் கல்வி மையத்திலும் தனி வகுப்பு பயில்கிறார்கள்.
தேவை: ரூ.1500/- (ஒவ்வொருவருக்கும்) கல்வி செலவு (நோட்டுகள்) மற்றும் சத்து மாவிற்காக.
பெயர்:1. செல்வி.ரேவதி, 16 வயது, 2. செல்வி. அஞ்சலி, 16 வயது, 3. செல்வி. திலகா, 17 வயது
குடும்பபிண்ணனி: மூவருமே குழந்தை தொழிலாளர்கள். குடும்ப வறுமை காரணமாக கொத்தடிமை வாழ்வு வாழ்ந்தவர்கள். பெற்றோர்களுக்கு படிக்க வைக்க விருப்பம் இருந்தாலும் வறுமை காரணமாக அதை செய்ய முடியாமல் இருந்தவர்கள். திலகாவின் வீட்டில் அவர் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடக்கிறது.
வேர்களின் உதவி: 2004-ம் வருடம் இவர்களை தியாகி நடுனிலை பள்ளியில் சேர்த்திருக்கிறோம். இந்த காலாண்டு தேர்வில் ரேங்க் எடுத்திருக்கிறார்கள். வேர்கள் கல்வி மையத்திலும் தனி வகுப்பு பயில்கிறார்கள். மற்ற எல்லா நேரங்களிலும் தறி நெய்து குடும்பத்திற்கு உதவுகிறார்கள்.
தேவை: ரூ.1500/- (ஒவ்வொருவருக்கும்) கல்வி செலவு (நோட்டுகள்) மற்றும் சத்து மாவிற்காக.
பெயர்: 1.செல்வி. கோமதி , 16 வயது 2. செல்வி. சிவகாமி , 16 வயது
குடும்ப பிண்ணனி: பெற்றோர்கள் துப்புரவு தொழிலாளர்கள். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சமூக கட்டுப்பாடு மற்றும் வறுமை காரணமாக அதை செய்ய முடியாமல் நம்மை அணுகினார்கள்.
வேர்களின் உதவி: முதல் தலைமுறையினராக கல்வி பயிலுபவர்க்கு, வேர்கள் அனைத்து உதவிகளையும் செய்தது.
பெயர்: 1. செல்வி. தேவி , 15 வயது 2. செல்வி. ரேணுகா, 12 வயது
குடும்பப் பிண்ணனி: அப்பா, அம்மா கூலிக்கு தறி நெய்கிறார்கள். மூன்று சகோதரிகள், இரண்டு வருடமாக குழந்தை தொழிலாளராக தறியில் கொத்தடிமையாக இருந்த இவர், முதலாளி அடித்து துன்புறுத்துவதால், தாள முடியாமல் தன்னை மீட்கும்படி வேர்களை அணுகினார்.
வேர்களின் உதவி: 2004: ரூ. 4000/- கடன் சுமையை தீர்த்து, அவரை மீட்டு, B. M பள்ளியில் , வேர்கள் கல்வி கட்டணம் மற்றும் கல்விசெலவுகளை செலுத்தியது. அவருக்கு தேவையான சீருடை, கல்வி உபகரணங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்ததோடு, அவருக்கு தனி வகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தேவை: ரூ. 1000/- (ஒவ்வொருவருக்கும்) கல்வி செலவிற்காக மற்றும் சத்து மாவிற்காக
பெயர்:1. செல்வி. பச்சையம்மாள், 13 வயது, 2. செல்வி. ஜமுனா, 11 வயது, 3. செல்வன். சீனிவாசன், 13 வயது
குடும்பபிண்ணனி: மூவருமே குழந்தை தொழிலாளர்கள். குடும்ப வறுமை காரணமாக கொத்தடிமை வாழ்வு வாழ்ந்தவர்கள். பெற்றோர்களுக்கு படிக்க வைக்க விருப்பம் இருந்தாலும் வறுமை காரணமாக அதை செய்ய முடியாமல் இருந்தவர்கள்.
வேர்களின் உதவி: 2006-ம் வருடம் இவர்களை மீட்டு ரூ.7000/- ஒவ்வொருவருக்கும் கடனை அடைத்து, hand in hand bridge schoolஇல் சேர்த்திருக்கிறோம்.
சீனிவாசன், முத்து செட்டி பள்ளியில் பயில்கிறார். மற்ற எல்லா நேரங்களிலும் தறி நெய்து குடும்பத்திற்கு உதவுகிறார்.
தேவை: ரூ.1500/- (ஒவ்வொருவருக்கும்) கல்வி செலவு (நோட்டுகள்) மற்றும் சத்து மாவிற்காக.
வேர்கள் மூலம் வளர்ந்த சிலரின் விவரம்:
பெயர்: செல்வன்: ரத்தினகுமார். நோயாளி தந்தை, வீட்டு வேலை செய்யும் தாய், மனநலம் குறைந்த தம்பி, வாடகை கூட கொடுக்க இயலாத சூழலில் நம்மை அணுகியவர். இவர் பல்லவன் இன்சினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்சினியரிங் நம் வேர்கள் மூலம் படித்து, இன்று, குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்கிறார்.
பெயர்: செல்வி இராணி. போலியோவால் பாதிக்க பெற்று, கூரை கூட சரியில்லாத வீட்டில், விதவை தாய், மற்றும் இரண்டு சகோதரிகளுடன், மேல்நிலைக்கல்வி பெற நம்மை அணுக, இப்பொழுது வேர்கள் உதவி மூலம், மாண்டிசரி டிரையினிங் முடித்து, பொள்ளாச்சியில், ரைஸ் மாண்டிசோரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து தன் குடும்பத்தை வழிநடத்துகிறார்.
பெயர்: செல்வி.கயல்விழி,
குடும்பபிண்ணனி: விதவை தாயார், முறுக்கு விற்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றும் அண்ணன், வக்கீலாகும் கனவுடன் வறுமையிலும் படிப்பை விடாது தொடர்பவர்.
வேர்களின் உதவி: 2003.செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தும், கல்விகட்டணம் கட்ட முடியாமல், எல்லா மூலைக்கும் சென்று அலைக்கழிந்து பின்னர். முகம் தெரியா நண்பர், நம் மூலம் உதவ முன்வந்திட, முதல் ஆண்டு கட்டணம் ரூ. 18000/- கட்டினோம். பின் எல்லா ஆண்டுகளும் வேர்கள் துணையுடன் வெற்றியுடன் முடித்துவிட்டார். தான் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது, வேர்கள் மூலம் தானும் சமூக பணியாற்ற வேண்டும் என்பது இவரின் விருப்பம். நன்கு கவிதைகள் எழுதுவார். பத்திரிகைகளிலும் பிரசுரமானது இவரது கவிதை. பல்வேறு திறன்கள் நிறைந்தவர்.
பெயர்: 1. செல்வன். ரமேஷ் ,
குடும்பப் பிண்ணனி: அப்பா இல்லை. அம்மா கூலிக்கு தறி நெய்கிறார். ஒரு தமக்கை. வறுமை, சமூக தூற்றல், இவைகளுக்கு நடுவேயும், மகனை படிக்க வைக்க யார் யாரிடமோ உதவி கோரி, கடைசியில் வேர்களை நாடினார்.
வேர்களின் உதவி: 2004: பக்தவச்சலம் பாலிடெக்னிக்கில் இடம் கிடைத்தும், சேரமுடியாமல் இருந்த இவருக்கு, வேர்கள் கல்வி கட்டணம் ரூ. 7500/- மற்றும் தேர்வு கட்டணங்களை செலுத்தியது. 95% மேல் மதிப்பெண் எடுக்கும் இவர், இப்பொழுது கடைசி செமஸ்டரில் இருந்து கொண்டு வேலைக்கு முயல்கிறார்..
பெயர்: செல்வி. ஹேமலதா,
குடும்ப பிண்ணனி: தாயார் மனநலம் சரியில்லாதவர், தகப்பனார் வீட்டிற்கு வருவதேயில்லை, அண்ணனும் பகுதி நேர வேலை, தானும் பகுதி நேர வேலை பார்த்து கொண்டே படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார். 10 வது வகுப்பில் பள்ளியிலேயே முதன் மாணவியாக தேர்ச்சி பெற்றாலும், மேற்படிப்பை தொடர முடியாத சூழ்னிலை.
வேர்களின் உதவி: பள்ளி ஆசிரியர், வேர்களிடம் ஹேமலதாவின் மேற்படிப்புக்கு உதவுமாறு வேண்டிக்கொள்ள, நாமே கார்டியனாக இருந்து sskv மேல்னிலைபள்ளியில் சேர்த்திருக்கிறோம். பள்ளி தலைமை ஆசிரியரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். தனி வகுப்பும் சேர்ந்துள்ளார்.+2 தேர்வின் முடிவை எதிர்பார்த்து இருக்கிறார்.
பெயர்: செல்வி. மணிமேகலை, வயது 17
குடும்ப பிண்ணனி: விதவை தாயார். வீட்டு வேலை செய்து வருகிறார். மூன்று சகோதரிகள்.10 வது வகுப்பில் 90% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றாலும், மேற்படிப்பை தொடர முடியாத சூழ்னிலை. விடுமுறை நாட்களில் வேலை செய்து தனது தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து கொள்கிறார். நல்ல பேச்சாளர்.
வேர்களின் உதவி: வேர்களிடம் மேற்படிப்புக்கு உதவுமாறு வேண்டிக்கொள்ள, நாமே கார்டியனாக இருந்து sskv மேல்னிலைபள்ளியில் சேர்த்திருக்கிறோம். தனி வகுப்பும் சேர்ந்துள்ளார். +2 தேர்வின் முடிவை எதிர்பார்த்து இருக்கிறார்.
இன்னும் சில தேவைகள்:
வேர்கள் கல்வி மையம்:
மீட்டெடுத்த குழந்தை தொழிலாளர்கள், புதிதாக பள்ளியில் சேர்க்கப்படும்போது, இழந்த கல்வியாண்டுகள் அவர்களை மேலும் சிரமப்படுத்துகின்றன. அதற்கு உதவிடும் வகையிலும், சிறப்பு வகுப்புகள் எடுக்கும் வகையிலும் மாலை நேரங்களில் வேர்கள் கல்வி மையம் செயல்படுகிறது. மூன்று இடங்களில் செயல்பட்டு வரும் இந்த மையங்களில் சுமார் 20 பேர் பயில்கின்றனர். அவர்களுக்கு சத்து மாவும் வழங்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலோருக்கு, காலை உணவே கிடைப்பதில்லை.
தேவை: மையங்களில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பு சம்பளமாக ரூ. 500/- மற்றும் சத்துமாவிற்காக ரூ. 500/- மாதந்தோறும், ஒவ்வொரு மையத்திற்கும் தேவைப்படுகிறது.
அன்னதானம் வழங்கல்:
தமிழ் புத்தாண்டு, காந்தி ஜெயந்தி, மற்றும் பிற விசேஷ தினங்களிலும் வேர்கள் சார்பாக ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
வேர்கள் உளவியல் ஆலோசனை மையம்:
மாணவர்கள் மற்றும், பெண்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குகிறோம்.
தேவை: மாதாந்திர வாடகை ரூ. 1500/-
மருத்துவமுகாம்கள் மற்றும் இரத்ததானம்:
கிராமப்புறங்களில், மருத்துவ உதவி எளிதில் கிட்டாதவர்க்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கும், மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம். வேர்களை நாடி வருவோர்க்கு, தன்னார்வ தொண்டர்கள் மூலம், இரத்ததான உதவிகளும் செய்கிறோம்.
அளுமை பயிற்சி முகாம்கள்:
பள்ளி மாணவர்களிடம், தன்னம்பிக்கை, நினைவுத்திறன், தெளிவான குறிக்கோள் அமைத்துக்கொள்ளல், தன்னலமற்று சமூக பணியாற்றும் சிந்தனை, ஊடக விழிப்புணர்வு, வளர் இளம் பருவ சிக்கல்களை எதிர்நோக்க ஆலோசனைகளை உள்ளடக்கி, உளவியலாளர்களோடு இணைந்து பயிற்சி முகாம்கள் நடத்துகின்றோம்.
பெண்கள் தன் திறன் வளர்க்கும் பயிற்சி முகாம்கள்:
உடல் ஆரோக்கியம், தன் திறன் வளர்த்தல், ஊடக விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கி, கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்துகின்றோம்.
குழந்தைகள் திருவிழா மற்றும் புத்துணர்ச்சி முகாம்கள்:
கல்வியோடு கூட விளையாட்டும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வண்ணம், குழந்தை தொழிலாளர் மற்றும் அதிலிருந்து மீட்டெடுத்த குழந்தைகள் அனைவருக்கும் புத்துணர்ச்சி ஊட்டும் வண்ணம் குழந்தைகள் திருவிழா நடத்துகின்றோம்.
2 பதில்கள் இது வரை »
மறுமொழி RSS · வரு தொடுப்பு URI
ஆனந்தன் சொன்னார்,
செப்டம்பர் 17, 2008 @ 11:18 மு.பகல்
நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த அமைப்பு பற்றிய விவரங்களைப் படித்தேன். மிகவும் சிறப்பாக உள்ளது. தங்களின் சீரிய பணித் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி!
ஆனந்தன்
aruna சொன்னார்,
அக்டோபர் 5, 2008 @ 12:15 பிற்பகல்
பணி தொடர வாழ்த்துக்கள்..
அன்புடன் அருணா